ஒரு ஜென் கதை சொல்ல முடியுமா?
ஒரு ஜென் கதை சொல்ல முடியுமா?
கதை#1
ஒரு கற்றறிந்த புரஃபஸர், ஜென் குருவை தேடி வந்தார்.
குருவே, பல நூல்கள் படித்து விட்டேன் ஆனாலும் இந்த ஜென் தத்துவம் சரியாக விளங்க வில்லை. நீங்கள் கொஞ்சம் விளக்கமாக சொல்ல முடியுமா?
குரு குறுநகை புரிந்தார். தேநீர் கோப்பையை அவர் முன்பு நகர்த்தினார்.
புரஃபஸர் புரிந்து கொண்டு, இரண்டு கோப்பைகளில் தேநீர் விட ஆரம்பித்தார். இரண்டாவது கோப்பையும் நிரம்பி விட்டதால் தேநீர் விடுவதை நிறுத்தினார்.
ஏன் நிறுத்தி விட்டாய்? தொடர்ந்து நிரப்பு என்று சைகை செய்தார்.
கோப்பை நிரம்பி விட்டதே? இனிமேல் நிரப்பினால் வழிந்து ஓடுமே? என்று புரஃபஸர் ஐயத்தோடு குருவை வினவினார்.
காலி கோப்பையில் தான் தேநீர் நிரப்ப முடியும். காலி கோப்பையாக இரு!
கதை#2
ஒரு குதிரை பெரிதாக கனைத்துக் கொண்டே சாலையில் புழுதி பறக்க வந்தது.
சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த ஒரு வழிப்போக்கன்,
"இவ்வளவு அவசரமாக எங்கு செல்கிறாய்?" என்று அந்த குதிரையில் சவாரி செய்பவனை கேட்டான்.
எனக்கு தெரியாது. இந்த கேள்வியை குதிரையிடம் கேள்! என்று பதில் வந்தது.
பொதுவாக ஜென் கதைக்கு விளக்கம் கொடுப்பது கிடையாது. கொடுத்தால் அது ஜென் தத்துவமல்ல. இருந்தாலும் இது விதிவிலக்கு...
இங்கு குதிரை என்பதை உங்கள் எண்ணங்கள்/புலன்கள் என்று உருவகப்படுத்தி கொள்ளவும்.
நீங்கள் குதிரையில் சவாரி செய்கிறீர்களா? அல்லது குதிரை உங்களை ஒட்டி செல்கிறதா?
குதிரையின் கடிவாளம் உங்களிடமே இருக்கட்டும்.
கதை#3
ஒரு ஜென் குருவை தேடி நாடெங்கிலும் இருந்து பல சீடர்கள் அவரது ஆசிரமத்துக்கு வந்து பயின்றனர். அதில் ஒரு சீடர் மட்டும் சின்ன சின்ன திருட்டுகள் செய்து வந்தார்.
ஒரு நாள் கையும் களவுமாக மாட்டிக் கொண்டார். குருவிடம் பஞ்சாயத்துக்கு சென்றனர். குரு அவரை விட்டு விடுமாறு சொல்லி விட்டு சென்று விட்டார்.
குரு சொல்லி விட்டாரே… என்று விட்டு விட்டார்கள்.
இரண்டாம் முறையும் நம்மாளு கைவரிசையை காட்ட, சீடர்கள் எளிதாக பிடித்து விட்டனர். இந்த முறையும் மன்னிக்கப்பட்டார்.
மூன்றாம் முறையும்...
இந்த முறை, சீடர்கள் கடுப்பாகி விட்டனர்.
"நாங்க என்ன லூசா? இப்பவே நாங்க எல்லோரும் ஆசிரமத்தை விட்டு வெளியேறுகிறோம்" என்று குருவிடம் எகிறி விட்டனர்.
"நண்பர்களே! எது சரி? எது தவறு? என்று உங்களுக்கு தெரிந்திருக்கிறது. எனவே நீங்கள் தாராளமாக வெளியேறி வேறு இடத்தில் சென்று கல்வியை தொடரலாம்.
ஆனால் நமது நண்பருக்கு தவறுக்கும் சரியான விஷயத்துக்கும் இன்னும் வேறுபாடு தெரியவில்லை. நான் கற்பிக்கவில்லையெனில் வேறு யார் கற்பிப்பார்?
இவர் என்னோடு தான் இருப்பார், நீங்கள் உங்கள் விருப்பம் போல வெளியேறலாம்."
அந்த திருட்டு சீடர் கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்தது.