கே.வி ஆனந்த் - மிகை வண்ணங்களின் காதலன்
கே.வி ஆனந்த் - மிகை வண்ணங்களின் காதலன்
கே.வி ஆனந்த் சற்று மிகைப்படுத்தப்பட்ட ஆனால் அழகான துலக்கமான சித்திரங்களை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார் - அவருடைய ஒளிப்பதிவில் காட்சிகள் கூட துண்டுத் துண்டு சித்திரங்களாகவே என் மனத்தில் பதிந்துள்ளன. அவருடைய இயக்கத்தில் வந்த படங்களில் கூட அப்படித்தான். அதுவும் பாடல்களில் வரும் மொண்டாஜ் பாணி அவ்வளவு அழகாக இருக்கும்.
பி.ஸி ஶ்ரீரம் மிக மென்மையான ஒளியில் சன்னமான வண்னங்களுடன், ஒளி-நிழல் பின்னல்களுடன் காட்சிகளை உருவாக்க விரும்பினார் என்றால், அந்த காட்சிகள் கதையமைப்புடன் பொருந்தி படத்தின் செய்தியை உள்மனத்துக்கு உணர்த்த வேண்டும் என நினைத்தார் என்றால், அவருடைய சீடரான கே.வி ஆனந்த் ஒரு மீ-எதார்த்த கனவுலக பாணி ஒளியமைப்பை கொண்டு வந்தார். 96இல் என் பதின்வயதில் “காதல் தேசம்” வந்த போது “எப்படி இப்படியெல்லாம் எடுக்கிறார்கள்?” என பார்த்து பார்த்து ஏங்கியது நினைவுள்ளது. “என்னைக் காணவில்லையே நேற்றோடு” பாடலில் அந்த நீல நீர் அப்படி கனவில் காண்பது போல - எட்டித் தொடலாம் - என்பது போல இருக்கும். ஆனால் இதே மாதிரி நீல வண்ணம் கலக்கப்பட்ட கடல்நீர் குட்டையை “ஒரு தெய்வம் தந்த பூவே” பாடலில் ரவி கே. சந்திரன்-மணிரத்னம் கூட்டணி அவ்வளவு கவித்துவமாக பாடலின் கருவுக்கு பொருத்தமாக அமைத்திருப்பார்கள். இந்த வித்தியாசம், கதையை மீறி நிற்கும் துடுக்குத்தனம் தான் கே.வி ஆனந்தின் தனித்துவம். இதுதான் அவர் தமிழ் சினிமாவுக்கு அளித்த கொடை - pop art என சொல்கிறோமே, அல்லது anime, அனிமேஷன் படங்களில் வருகிற பாணியிலான ஒரு வண்ணத் தேர்வை அவர் எதார்த்த சினிமாவுக்கு, வணிக தமிழ் சினிமாவுக்கு கொண்டு வந்தார். அதை அவ்வளவு சிலாக்கியமாக செய்தார்.
சில திருமணங்கள் ஒரே கலவரமாக, கச்சாமுச்சாவென நடந்து முடியும், ஆனால் புகைப்படக் கலைஞர் அதனுள் அழகான கவித்துவமான தருணங்களை கண்டடைந்து ஆல்பமாக்கி அளிக்கும் போது அதைப் பார்க்கும் கணவன், மனைவிக்கு ஒரு நொடி இது நாம் அல்லவென்று லஜ்ஜையாகவும், அட நாம் தானா என பெருமையாகவும் இருக்கும். கே.வி ஆனந்த் தான் ஒளிப்பதிவு செய்த குப்பை படங்களைக் கூட அப்படி உருமாற்றினார் என நினைக்கிறேன். அவர் முதலில் ஒளிப்பதிவு செய்த ப்ரியதர்ஷனின் “தேன்மாவின் கொம்பத்து” பாருங்கள் - காட்சிகள் ஏதோ காமிக்ஸ் கதையில் நிகழ்வன போலத் தோன்றும்; பளிச்சென்று, சட்டகத்தில் பாத்திரங்கள் இருந்து எழுந்து நம்மை நோக்கி வருவதைப் போல, இது நம் தேசத்திலே நடக்கிற கதை அல்ல என்பது போல. “காதல் தேசம்” பார்த்து விட்டு நகரங்களில் இளம் பெண்கள் இப்படித்தான் இருப்பார்கள் போல, ஒரு ஏழைப்பையனின் மொட்டை மாடி அறை இவ்வளவு ஸ்டைலாக இருக்கும் போல என நான் என் கிராமத்து வீட்டில் இருந்து யோசித்து ஏமாந்திருக்கிறேன். அந்த பூக்கள் இரைந்து கிடக்கும் சாலையில் இளம்பெண்களின் கால்கள் மிதித்து அழகாக நசுக்கி வரும் காட்சி இருக்கிறதே! இன்னொரு பக்கம் இந்த வகையான கற்பனாவாதம் - தபு சங்கரை நூறாயிரம் மடங்கு பெருக்கி உருவாக்கப்பட்ட மிகை அழகியல் - பெண்களைப் பற்றி ஒரு தவறான சித்திரத்தை அந்த காலத்தில் எனக்கு ஏற்படுத்தியது.
இந்த கற்பனாவாத ஒளியமைப்பு ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் ஆண்-பெண் உறவு குறித்து ஒரு அவநம்பிக்கையான எண்ணமே கே.வி ஆனந்துக்கு இருந்ததென கருதுகிறேன்: அவர் எழுதிய “காதல் படிக்கட்டுகள்” தொடர் என்று தான் நினைக்கிறேன்; அதில் தன் நண்பனின் காதலி ஒரு இரவு விருந்தின் போது அவள் போதையாகி விட்டு தன்னிடம் பாலியல் விருப்பம் தெரிவித்ததாக எழுதியிருப்பார். மானுடக் காதல் எல்லாம் அந்தந்த சூழலுடன் முடிந்து போவது தான் எனும் தொனி அதில் இருக்கும்.
அவருடைய பெரும்பாலான படங்களில் எந்த இளம் பெண்ணுமே தேவதையாக இருக்க மாட்டாள். எதிர்மறையான ஒரு சந்தர்பத்தில் இருந்து, தவறான பின்னணியில் இருந்து தோன்றுவார்கள். ஒரு துரோகியான நண்பனின் தங்கை (“அயன்”), துரோகியின் தோழி (“மாற்றான்”) என. சூழ்நிலை மாறினால் சட்டென காதலனை தவறாக புரிந்து கொண்டு வெறுத்தொதுக்குவார்கள் (“அயன்”). காதலன்களும் அப்படியே - தான் உண்மையில் யாரென்பதை, ஏன் வில்லனுக்கு உதவுகிறான் என்பதை காதலிக்கு சொல்லாமல் ஏமாற்றுவார்கள் (“கோ”) அல்லது ஒரு படப்பிடிப்பின் போது சகநடிகையை காதலி பார்த்திருக்கும் போதே அணைந்து உளம் மயங்குவார்கள் (“கவண்”).
ஒரு இயக்குநராக அவருடைய முதல் படம் (“கனா கண்டேன்”) வியப்பையும் நம்பிக்கையையும் தந்தது; ஆனால் அதன் பிறகு அவர் முழுமசாலா படங்களில் இறங்கி விட்டார். இதிலும் ஒரு சுவாரஸ்யம் அவர் சங்கரைப் போன்றே சிந்தித்தார் என்பது; அவர் இறுதி வரை மனதளவில் சங்கரின் “மாற்றான்” தான். ஒரு நடக்க வாய்ப்பில்லாத ஒற்றை வரியை (what if?) எடுத்துக் கொண்டு அதை ஒரு எதார்த்த சூழலில் பொருத்தி விடுவார். கடல் நீரை குடிநீராக மாற்றும் தொழில்நுட்பத்தை ஒருவர் கண்டுபிடித்தால், அதை சாத்தியமாக்குவதில் அவருக்கு பல சவால்கள், தடைகள் வந்தால்? (“கனா கண்டேன்”) [Catch Me If You Can பாணியில்] ஒரு கடத்தல்காரன் கஸ்டம்ஸுடன் சேர்ந்து கடத்தல்காரர்களை ஒழிக்க நினைத்தால்? அரசியல் சூழலை மாற்றும் நோக்கில் தேர்தலில் ஈடுபட்டு வென்று ஆட்சி அமைக்கும் இளைஞர்களின் தலைவன் ஒரு துரோகி, தன் அதிகாரத்துக்காக யாரையும் ஏமாற்ற, ஒழிக்க தயங்காத ஒரு மனிதாபிமானமற்ற வில்லன் என பின்னர் நாயகனுக்கு தெரிய வந்தால்? (“கோ”) தான் ஒட்டிப்பிறந்த இரட்டையனாக தன் தந்தையின் பேராசையே காரணம் என ஒருவனுக்குத் தெரிய வந்தால்? (“மாற்றான்”) இப்படி அவருடைய ஒவ்வொரு படத்தையும் what if கேள்வியாக நாம் வகுத்திட முடியும். இந்த “ஒருவேளை இப்படி நடந்தால்?” கருத்துருவை அவரால் எதார்த்தமாக நிறுவி நியாயப்படுத்த முடிந்தால் அப்படம் சிறப்பாக அமைந்து விடும். “அயனைப்” போல. சில படங்களில் அது நம்பும்படியாக இருக்காது. அவை படுத்து விடும். ஆனால் எப்படிப் பார்த்தாலும் ஒரு சிறிய வியப்பில்லாமல் அவருடைய ஒளிப்பதிவாக்கிய காட்சிகளையோ இயக்கிய படங்களையோ நாம் பார்க்க முடியாது - ஒருவேளை அப்படித்தான் அவர் தன்னை மற்றவர்கள் பார்க்க வேண்டும் என விரும்பி இருக்கலாம்.
போய் வாருங்கள் கே.வி ஆனந்த் - நீங்கள் விடைபெறும் போது என் பதின் காலமும் கூடவே விடைபெறுவதாகத் தோன்றுகிறது!